Tuesday 7 May 2013

ஊட்டி சுற்றுலா (பகுதி -1)



கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பகிர்ந்து கொண்ட கல்லூரிக்கால நினைவுகளுக்குப்பின்னர் இதோ... ஐந்து மாதங்கள் கடந்தோடி விட்டன.   கிருஷ்ணன்கூட அவனுக்கே உரித்தப்பாணியில் ..என்ன தம்பி? இன்னமும் சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டவில்லையா?....... என்று சென்றமுறை பகிர்ந்து கொண்ட சைக்கிள் பயணத்திற்கு பிறகு பெரிய தொய்வு ஏற்பட்டதைப்பற்றி குறிப்பிட்டிருந்தான்.  இரத்த ஒட்டத்துடன் கலந்துவிட்ட கல்லூரி கால நினைவுகளை ஆயுள் முழுவதும் பகிர்ந்து கொள்ளலாமே என்ற ஆழமான நம்பிக்கைத்தான் அவ்வப்பொழுது எடுத்துக்கொள்ளும் நீண்ட இடைவெளிக்கு காரணம்.  

கிருஷ்ணா விஷயத்தில் ஒரு வருத்தமான ஒரு நிகழ்வு என்னவென்றால் அவனும் எங்களுடன் N.C.C யில் இருந்திருக்கிறான் என்பதையும்

Monday 29 April 2013

முதல் ஆண்டு

நம் சந்திப்பு நிகழ்ந்து ஓராண்டு நிறைவு இன்று. எத்தனை  பேருக்கு என் குறுஞ்செய்தி கிட்டும் முன் நினைவு இருந்தது?

Monday 1 April 2013

நானும் வானவில் அனுபவமும்

         கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஒழுங்காய் படித்த ஞாபகம் இல்லை.  ஏதாவது  புதுமை செய்ய வேண்டும் என்பதில் எண்ண  ஓட்டம் இருந்து கொண்டு இருக்கும். சோம்பேறித்தனம் எதையும் செய்ய விடாது.  எங்களுக்கு ராக்கிங் அனுபவம் இல்லை என்பதால் எங்கள் junior களுக்கும் அதே போன்ற அனுபவம் தந்திட அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்திட வேண்டும் எனத் தொடங்கினேன். அதைப்போன்ற எண்ணம் பிற நண்பர்களுக்கும் இருந்ததினால், அதன் முழு காரணம் நான் என்று சொல்ல இயலாது. இவ்விவரத்தை, திரு சொ  சொ  மீ அவர்களிடம் சென்று பேசியது நான் என்பது நினைவில் இருக்கிறது. என்னை மாணவர்களை வரவேற்றுப் பேச சொன்னார், நான் பொது வரவேற்புரை படித்து விடுகிறேன், மாணவர்கள் வரவேற்பினை பாலு செய்யட்டும் என்று சொல்லித் தப்பி விட்டேன் என்பதும் நினைவில் ஆடுகிறது. இது நடந்தது  இரண்டாம் ஆண்டின் துவக்கத்தில்.
        மூன்றாம் பருவ முடிவில், எனக்கு ஒரு நாள் திடீரென ஏன் கையெழுத்துப் பத்திரிக்கை நடத்தக் கூடாது எனத் தோன்றியது.  உடனே அவ்விஷயத்தை நண்பன் நாகராஜனிடம் பகிர்ந்து கொண்டேன். அவன் விரோதி நாகராஜன் ஆகிவிட்டான்.  ஏனென்றால் நான் என் மனதில் இருந்ததை சொன்னவுடன், கேவலமாக ஒரு வீரப்பா சிரிப்பை சிரித்து, இதெல்லாம் ஏண்டா உனக்கு என்று சொல்லி தொடர்ந்து சிரித்தான். நான் உடனேயே அந்தத் திட்டம் வேறு யாரிடமும் சொல்லி இது போல  அவமானப் படவேண்டாம் என முடிவு செய்து உடனே கலைத்தேன்.  நான் முடிவெடுத்த அடுத்த நொடியில், அவன் சிரிப்பு நின்றது, ஆமா நீ சொல்ற மாதிரி செஞ்சா என்ன? என்று கேட்டு மீண்டும் நண்பன் ஆனான். 
     அவ்வளவுதான் அந்த விஷயம் நண்பர்கள் சீனி, அன்வர் ஆகியோரிடம் பகிர்ந்து கொள்ளப் பட்டது.( இது போன்ற ஏதேனும் செய்ய வேண்டும் என்றால் இந்த நால்வர் அணி ஈடுபடும். சினிமா, கோயில், நண்பிகள் வீட்டு விஜயம் என்றால் என் பெயர் விடுபடும். ஏழை சொல் எங்கே எடுபடும்?) திரு சொ  சொ  மீ அவர்களிடம் சென்று பேசி அனுமதி பெற்றோம். அதன் பின்னர் பத்திரிகை ஆசிரியராக என் பெயர் முன், பின் வழியப்பட்டு ஏக மனதாக தேர்ந்தெடுத்து, (ஏனென்றால் என் மனதில் உருவானத் திட்டம் என்பதால் நண்பர்கள் சிறிதும் தயங்காமல் என் பெயரே மொழிந்தார்கள்). நாகுவின் கையெழுத்து நன்றாய் இருக்கும் என்பதனால் பிரதி ஒன்றை அவன் எழுத மற்ற பிரதிகள் xerox எடுப்பது என்றும் முடிவானது.   அதன் காகிதம் வாங்க நாங்கள் கீழ ஆவணி வீதி முழுவதும் அலைந்து,எங்கே குறைந்த விலையில் கிடைக்கும் என் கடைக் கடையாக ஏறி இறங்கி அப்பொழுது இதை எப்படி எல்லாம் மேம்படுத்த வேண்டும் என ஆலோசித்துக் கொண்டே செல்வோம்.

ஆசிரியர் தலையங்கம், ஒரு கதை, ஒரு கட்டுரை சிறு துணுக்குகள் என தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடுவது என முடிவு செய்யப் பட்டது.  பத்திரிக்கையின் ஓவியராக junior  செந்தில்வேலன் தேர்ந்தெடுக்கப்பட, முதல் பிரதி இரு புறாக்கள் வானவில்லின் பின்னணியுடன் இருக்கும் படமும், அதன் miniature பத்திரிக்கையின் logo வாகவும் தெரிவு செய்யப் பட்டது. அப்பொழுது திரு ராஜீவ் காந்தி அவர்களால் அறிமுகப் படுத்தப் பட்ட நவோதயா கல்விமுறை தமிழகத்தில் தேவை என்ற தலையங்கம் என்னால் எழுதப்பட்டது.  அன்வர் - மு வ (முன் வழுக்கையாம்) என்ற பெயரில் "காத்திருந்தேன் காரோடு" என்ற மர்மக்கதை எழுதிக் கொடுக்க, சிறுகதை எழுத்தாளர் மற்றும் ஆசிரியரின் அனுமதி இல்லாமலேயே கதையின் முடிவில் சிறுமாற்றம் செய்து, எழுத்தாளருக்கு  ஏமாற்றம் கொடுத்தான் நாகராஜன்.  அதில் திரு சொ  சொ  மீ அவர்களின் கவிதையும் வந்தது.  ஆங்கிலப் பகுதி என்ன என்று நினைவில் இல்லை.  வெளியீட்டு விழா  நடத்த முடிவு செய்யப் பட்டது.  திரு சொ  சொ  மீ அவர்கள் ஆலோசனைக்கு இலங்க தமிழ்ப் பேராசிரியர் திரு பு.மு. சாந்தமூர்த்தி அவர்களை வெளியிடவும், முதல்வரை பிரதி பெற்றுக் கொள்ளவும் அழைத்தோம்.

விழாவின் துவக்கத்தில் நான் வெள்ளுடை வேந்தராக (ஹி  ஹி  ஹி ) வந்து தொகுத்திட, பேரா பு.மு.சா அவர்கள் வெளியிட்டு பத்திரிகை குறித்து உரையாற்றத் தொடங்கினார்.  திரு சொ  சொ  மீ அவர்கள் தான் மிகப் பெரிய தவறை செய்து விட்டதை உணரத் தொடங்கினார் போல, அவர் முகம் கருத்து சிறுத்துப் போனது. ஏனென்றால், அதில் இருந்த எந்த ஒரு சின்ன நல்ல விஷயத்தையும் குறித்து சொல்வதைத் தவிர்த்து, அட்டைப் படப் புறாவில் இருந்து அனைத்தையுமே குறை சொன்னார். நல்ல வேளையாக திரு சொ  சொ  மீ அவர்கள் கவிதை தப்பியது.  இரு புறா அமர்ந்து இருக்கின்றன அது புறான்னு  கேட்டு தெரிஞ்சுகிட்டேன் என்று ஆரம்பித்தார்.  அவர் எய்த அனைத்து அம்பினையும் தன்  சொல்லம்பினால் மறுத்து வந்தார் திரு சொ  சொ  மீ அவர்கள்.  அந்தப் புறாக்கள் தமிழும் ஆங்கிலமும் என்றும் கம்பீரமாய் அமர்ந்து இருக்கும்  ஆண்புறா ஆங்கிலம் என்றும் இணைந்து நாணியபடி அமர்ந்து இருக்கும் பெண் புறா  தமிழ் என்றும் விளக்கம் தந்தும் எங்களை, நம்மை மகிழ்சிக் கடலில் ஆழ்த்தினார்.  அதன் பின்னர் இரு பிரதிகள் மட்டுமே வந்து மறைந்து போனது வானவில்.

 (இது குறித்து நாகு, அன்வர் சீனி தன் நிலை குறித்து எழுதுவார்கள் என நம்புகின்றேன். )



Monday 18 March 2013

வீரத் தாய் வேலு நாச்சியார்

"வீரத் தாய் வேலு நாச்சியார்" என்ற நாட்டிய நாடகம், கடந்த சனிக் கிழமை (16-3-2013) அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நடை பெற்றது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்த்து வெற்றிக் கொடி நாட்டிய ஒரே அரசி என்ற அவரின் வாழ்க்கை சரித்திரம் நாட்டிய நாடகமாக நடத்தப்பட்டது. இதன் தயாரிப்பாளர் ம.தி.மு.க பொதுச் செயலாளர் திரு வைகோ என்பது குறிப்பிடத்தக்கது.

             தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படத்தை வரைந்த திரு வேணுகோபால் சர்மாவின் புதல்வர், திரு ஸ்ரீ ராம் சர்மா, பல்வேறு ஆவணங்களின் அடிப்படையில் இதன் வசனம் மற்றும் கதை அமைப்பை ஏற்படுத்த, திருமதி மணிமேகலை சர்மா இதன் நடன அமைப்பை உருவாக்கி உள்ளார். வேலு நாச்சியார் சிவகங்கை சமஸ்தானத்தின் ராணியான,  அவர் கணவர் முத்து வடுகநாதர் ஒரு பிரதோஷ நாளில், இறைவனை வழிபட செல்லும்பொழுது, ஆங்கிலேய அதிகாரி கர்னல் பென்ஜோர் என்பவனால் கொல்லப்பட, தலைமறைவு வாழ்க்கை மேற்கொள்ளும் நாச்சியார்,  மருதிருவரின் துணையோடும், ஏனைய குறுநில மன்னர்களின் துணையோடும், ஹைதர் அலி தந்த போர்த் தளவாடங்களைக் கொண்டும் எட்டு ஆண்டுகளுக்குப் பின் தன்  தாய் மண்ணை மீட்டெடுத்து, கர்னல் பென்ஜோரையும் மன்னித்து, பின் தன்  மண்ணை நல்ல விதமாய் ஆண்ட கதை.
இதில் "உடையாள் " என்னும் தாழ்த்தப்பட்ட குலத்தை சேர்ந்த பெண்மணி, அரசியை காப்பாற்ற மாறு கை, மாறு கால் வாங்கப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு இறக்கிறார். பின்னர் பெண்களைக் கொண்ட படையை ஏற்படுத்தும் நாச்சியார் உடையாளின் பெயரை தன் படைக்கு சூட்டி அவருக்கு மரியாதை செய்கிறார். போரில் ஒரு பகுதியாக குயிலி என்னும் பெண் தன்  உடலில் எண்ணை ஊற்றி, தீ வைத்துக் கொண்டு ஆங்கிலப் படையினரின் தளவாடக் கிடங்கை நாசமாக்குகிறார். இவ்விரு கட்சிகளும் நெஞ்சை உருக்கும் விதமாக கட்சி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாராட்டத்தக்கது.

        நடனம் ஆடிய திருமதி மணிமேகலை சர்மா நல்ல முக பாவத்தைக் காட்டினர் பின்னால் ஒலித்தக் குரல்களும் பிரமாதமாய் இருந்தது. ஹைதர் அலி வரும் காட்சியில் நாகூர் ஈ.எம். ஹனிபாவின் குரலைக் கேட்டபின் அவரின் இறைவனிடம் கையேந்துங்கள் பாடல் இரு நாட்கள் மனதில் ரீங்காரம் இட்டுக் கொண்டு இருந்தது.

               இன்னும் காட்சி அமைப்பில் அழுத்தம் கொடுக்க  வேண்டும். கொரில்லாப் போர் முறையை முதன் முதலில் பாரதத்தில் அறிமுகம் செய்தது இவர் என்ற தவறான கருத்தை கொடுத்து இருக்கிறார்கள். இவருக்கு முன்னதாக வீர சிவாஜி அந்த முறையை உபயோகித்து உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. பிரிட்டிஷ் படையிடம் தோற்ற மன்னர்கள்/அரசிகள் பெயரே முன்னிறுத்தப் படுகிறது, இவர் போல் வெற்றி கொண்டவர்களின் கதை கூறப்படுவதில்லை என்பது வருத்தம் தருகிறது. வீர சாவர்கர் தன நூலில் மாவீரன் அலெக்சாண்டரை புருஷோத்தமன் வென்றான், அனால் அது மறைக்கப் பட்டுள்ளது என்று சொல்கிறார். இது நம் நாட்டு சாபக் கேடு போலும். வெற்றிக் கதைகள் கூறப் படுவதில்லை. தோல்வியே முன்னிறுத்தப் படுகிறது.
            இதில் முக்கிய கதாப் பாத்திரங்கள் தவிர பிறர் தில்லி நாடக மற்றும் நாட்டிய மாணவர்கள்/மாணவிகள் என்பதும் இரு நாள் பயிற்சியில் மிக அருமையான நாட்டியத்தை தந்தார்கள் என்பதும் அவர்களின் திறமையை கண்டு தலை வணங்க வைத்தது

              விழாவின் இறுதியில் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக வைகோ பேசியது மனதை கொள்ளை கொண்டது. "திரிபுரம் எரித்த திரிசடைக் கடவுள்" என்று அவர் சொன்னவுடன், சிவபெருமான் மீதிருந்த பக்தி மிகுந்தது என்பதே உண்மை.

         இந்த நாட்டிய நாடகம் தங்கள் பகுதியில் நடைபெற்றால் தவறாமல் பாருங்கள், நம் நாட்டின் வெற்றி சரிதத்தை அறியுங்கள்

Thursday 7 March 2013

திரு சொ.சொ.மீ சொற்பொழிவு.

திரு சொ சொ மீ அவர்கள் மலேசியாவில் நிகழ்த்திய சொற்பொழிவு.


Thursday 21 February 2013

போதுமே மௌனம்

              கல்லூரியில்  படிக்கும் காலத்தில்தான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல், மௌனமாய் நின்றோம் என்றால் இப்பொழுதும் என்ன எழுதுவது என்று தெரியாமல் திடீரென அனைவரும் மௌனம் காக்கின்றோம்.  யாரும் படிப்பதில்லையா இல்லை comment  போடத் தெரியவில்லையா ஒன்றும் புரியவில்லை. நண்பர்களே மௌனம் கலையுங்கள், பதிவிடுங்கள், பதிலிடுங்கள்.   

                மடை திறந்த வெள்ளமென கட்டுரை படைத்த அன்வர் மகவு பிறந்த மகிழ்ச்சியில் திக்குமுக்காடி அமைதி ஆனந்தத்தில் இருக்கிறார்.  சிறியவன் சிந்திக்க நேரமின்றி விளையாடிக் கொண்டு இருக்கிறார் போலும்.(split  personality என விஜி நினைப்பது கேட்கிறது.)

                விஜி மட்டுமே தமிழர் திருநாள் அன்று பதிவிட்டு 2013க்கானக் கணக்கைத் துவக்கி வைத்துள்ளார். இனி புதுப் பதிவர்களும் வரவேண்டும் என ஆவலோடு இப்பதிவை இடுகின்றேன்.  வருக நண்பர்களே, வருக பதிவிடுக.

Monday 14 January 2013

பொங்கல் நல்வாழ்த்துக்கள்


உணவளிக்கும் உழவர்க்கு 
பல்லுயிர் காக்கும் பகலவனுக்கு 
பால் கொடுக்கும் பசுவுக்கு நன்றி கூறி 
மகிழ்வுடன் இனிய பொங்கல் திருநாளைக் கொண்டாடுவோம்.

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Tuesday 11 December 2012

திரு.சொ.சொ.மீ. சுந்தரம்


திரு சொ  சொ  மீ சுந்தரம் அவர்கள் குறித்த ஒரு தொகுப்பு அவரிடம் இருந்து எனக்கு கிடைத்தது. அதனை இங்கே பதிவிட்டுள்ளேன்.


        திரு சொ சொ மீ அவர்கள் 7.8.1943 அன்று தெய்வத்திரு சொர்ணலிங்கம் செட்டியார், தெய்வத்திரு  மீனாட்சி ஆச்சி ஆகியோருக்கு மகவாகப் பிறந்தார். அவர் தன் கல்லூரிப் படிப்பினை காரைக்குடி அழகப்பக் கல்லூரியில் இளம் வணிகவியலையும்   (B. Com ),  முது  வணிகவியலினை பச்சையப்பன் கல்லூரியிலும், M.Phil பட்டத்தை மதுரைக் காமராசர் பல்கலைகழகத்திலும் பெற்றார்.  வணிகவியலில் பட்டம் பெற்று பணி  செய்தாலும் முனைவர். வ.சுப. மாணிக்கனார்,  கம்பனடிப்பொடி என வழங்கப்படும் தெய்வத்திரு காரைக்குடி  சா. கணேசன் ஆகியோர் தூண்டுதலினால் தமிழ் பயின்று, படிக்கும் காலத்தில்  பலகலைக் கழக மரபுக் கவிதைப் போட்டி, சென்னை மாணவர் மன்ற கவிதைப் போட்டி ஆகியவற்றில்  மரபுக் கவிதை எழுதி முதல் பரிசு பெற்றுள்ளார்.

           1962 முதல் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களிலும், சிங்கப்பூர்  மற்றும் இலங்கையிலும் நடைபெறும் கவியரங்குகளில் பங்கு பெற்று, பின்னர் தலைமையும் ஏற்றுள்ளார். `1981 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில், கவியரசர் கண்ணதாசன் தலைமையில் நடைபெற்ற "தலையாய தமிழுக்கு நிலையாய  மகுடங்கள்" என்றத் தலைப்பில் 400 வரி மரபு கவிதைக்கு பொற்கிழிப் பெற்று, "பொற்கிழிக் கவிஞர்" ஆனார். கவியரசால், சொல்லுக்கு சொல் மீறும்  சுந்தரம் என்றப்  பாராட்டைப் பெற்றார்.

        1999 ல் மதுரை ராஜா மன்றத்தில் தமிழிசை சங்கத்தினரால் தமிழ் பணிக்காக மீண்டும் ஒரு பொற்கிழிப் பெற்றார். 2002 ல் சென்னை கம்பன் கழகம், 2005 ல் முன்னாள் அமைச்சர் இராம. வீரப்பன் அவர்களின் 80 வது அகவை கொண்டாட்டம், இவற்றில் பாராட்டு பெற்றார்.  2009 ஆம் ஆண்டு திருவாவடுதுறை ஆதீனத்தால் "தமிழாகமச் சிந்தனைச்  செல்வர்" என்றப்  பட்டம் சூட்டப் பெற்றார்.

        மதுரைத் திருப்புகழ் சபையினில் மாதந்தோறும் திருப்புகழ் விரிவுரை நிகழ்த்தி வரும் இவர், மதுரை கம்பன் கழகப் பொருளாளராக பணியாற்றுவதோடு, 2003 ஆம் ஆண்டு முதல் மதுரையில் திருவாசக விழா  நடத்தி வருகிறார்.  இவர் திருப்புகழையும், திருவாசகமும் முற்றும் கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இது மட்டுமல்லாது திருமந்திரம், பெரிய புராணம், கந்தபுராணம், கம்ப ராமாயணம், அபிராமி அந்தாதி, வில்லி பாரதம், திருவருட்பா, திருப்புகழ் ஆகியவற்றில் 15 நாட்கள் தொடர் சொற்பொழிவு செய்திருக்கிறார்.  தன்  15ஆவது  வயதில்  சிவ  தீக்ஷை  பெற்ற இவர், 1969 முதல் சபரி மலை யாத்திரையும், பழனிக்கு  காரைக்குடியில் இருந்து தைப் பூசத்திற்கு பாத யாத்திரையும் சென்று வருகிறார்.

இவர் பெற்ற பட்டங்களும் ஆண்டும், வழங்கியோரும்:
 1) 1972 - சொல்லோவியர் - பாவலர் மன்றம், திருப்பனந்தாள்.
 2) 1978 - திருமந்திரச் சொல்மணி - பன்னிரு திருமுறை மன்றம், மதுரை
 3) 1981 - விரிவுரை வித்தகர் - விட்டவாசல் முனீஸ்வரர் கோவில், மதுரை.
 4) 1999 - திருப்புகழ் உரைமணி - மதுரைத் திருப்புகழ் சபை 
 5)2001 - செந்தமிழ்ப் பேரொளி - கஞ்சி மகாஸ்வாமி ட்ரஸ்ட், திருப்பரங்குன்றம்
6) 2005 - நற்றமிழ் நாவலர் - திருவள்ளுவர் கழகம், மதுரை.

           இவர் தமிழில், காஞ்சிப்  பெரியவர் திருநீறு விடு தூது,  பண்டிதமணி பிள்ளைத் தமிழ், ஆண்டவனும் ஆண்டவரும், உலகப் புகழ் பெரும் கோவிலூர்த் திருமடம், காசிப்பதியும் கங்கை நதியும், கட்டிகுளம்   மாயாண்டி சுவாமிகள் வரலாறு, திருவாசகம் மூலமும் உரையும்  எந்தையும் தாயும் என்ற நூல்களும், ஆங்கிலத்தில், Secretarial Practice, Business Organisation, Insurnce, Entrepreneurship Development & Business Environment ஆகிய நூல்களை எழுதி உள்ளார். திருவாசக மூலம் மற்றும் உரையை குறுந்தகட்டிலும் வெளியிட்டுள்ளார்.

           சிங்கப்பூர், இலங்கை, மலேசியா , நேபாளம், திபெத், ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரியா மற்றும் வியட்நாம் போன்ற வெளிநாடுகளுக்கு சென்றுள்ள இவர்  திருக்  கயிலாய  யாத்திரையும்  மேற்கொண்டுள்ளார்.  தமிழுக்காக பணி  புரிந்த இவர், வணிகவியல்  பேராசிரியராக  சென்னை  லயோலாக் கல்லூரியில் 1964 முதல்  1965 வரையிலும், பழனி -  பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் 1966-67 ஆம் ஆண்டுகளிலும், 1967 முதல் 2008 வரையில்  நாம்  பயின்ற  சௌரஷ்ட்ராக்  கல்லூரியிலும்  பணியாற்றி  உள்ளார். 
  
கம்பன் அடிப்பொடி சா கணேசன் 10.4.1968 அன்று இவரை வாழ்த்தி  எழுதிய மரபுக் கவிதை இதோ உங்கள்  பார்வைக்கு:

நல்ல கவிவலவன்; நம்பனுறை செம் மனத்தனன்;
வெல்லத்  தமிழ்சுவைநா வீறாளன் - சொல்லரிய
மெய்யுணர்வு நன்குடைய மீனாட்சி சுந்தரன்
தெய்வ அருள் பெற்றுயர்க தேர்ந்து.