Wednesday, 31 October 2012

பேராசிரியர்களும் நானும் - 7

எல்லோருக்கும் ஒரு பதிவு என்றால் இவருக்கு மட்டும் இரண்டாவதும் பதிவிடும்  அளவிற்கு எத்தனையோ சம்பவங்கள். நாளும் ஒரு சம்பவம் நிகழும் என்றாலும் குறிப்பாய் சில சம்பவங்கள், என்னை முன்னிறுத்துவதையே  இங்கு குறிப்பிடுகின்றேன்.

கல்லூரியின் இரண்டாம் ஆண்டின் பொழுதினில் ஒரு முறை அவர் High Commissioner/Ambassador வித்தியாசம் குறித்து கூறி இருந்தார். ஒரு வாரம் கழித்து மீண்டும் அதைக் கேட்டார் வகுப்பில். நான் நினைவில் வைத்து இருந்ததால் உடனே சொல்லிவிட்டேன். அதுக்கு அவர் comment "கிருஷ்ணமூர்த்திக்கு படிப்பைத் தவிர மத்தது எல்லாம் வருது" (இப்பொழுதும் பொருந்துகிறதோ?). 

   ஆங்கில ஆண்டின் துவக்கம் "March" எனத் துவங்கி ஏழாம் மாதம் சப்தம் என்பதான  செப்தம்பர், எட்டாம் மாதம் அஷ்டம் எனக் குறிக்கும்  அ(ஷ்)க்டோபர்,   ஒன்பதாம் என்பதான "நவம்"பர், பத்தாம் எனக் குறிக்கும் "திசம்"பர்  என்ற அவர் தந்த செய்தி துணுக்கு இன்றும் நினைவிலாடுகிறது.
          வானவில் வெளியீட்டு விழாவில், அதன் ஆசிரியர் என்னும் ஹோதாவில் white and white போட்டுக்கொண்டு வந்து இருந்தேன். அங்கு தோழியர்களுக்காக வாங்கி வைத்து இருந்த ரோஜாப்பூ ஒன்றினை எடுத்து என் சட்டையில் நேருவைப் போல் வைத்துக் கொண்டேன். அதனை பார்த்துக் கொண்டு இருந்தவர், அருகில் வந்து நீ என்ன நேருவா,? உனக்கு ரொம்ப அவசியமோ என்று கேட்டார். நான் உடனே சரி சார், அதை வைத்துக் கொள்ளவில்லை எடுத்துவிடுகிறேன் என்று சொல்லி எடுக்கப் போனேன், இல்ல வச்சுக்கோ நல்லாத்தான் இருக்கு என்று சொல்லி சென்று விட்டார்.  இது  பார்க்க  முன்னுக்குப்  பின்  முரணாக  நடந்து  கொண்டார் என்று தோன்றும். அப்படியல்ல, எந்த  ஒரு  செயலையும்  செய்யும் முன் யோசிக்க வேண்டும். நான்  அந்த  ரோஜாவினை  எடுத்ததினால் ஏதேனும் ஒரு தோழிக்கு கிடைக்காமல் போகக் கூடும்.  நான்  உபயோகித்த  பூவை  வேறு  பூவையர்  சூட்டுவதும்  தவறாகிப் போகும் என்பதாலே இது என்பதை உணர்ந்தால், செம்மை  செய்யும்  செம்மல்  என்பதை உணரலாம். 
          
      என்னுடனான சம்பவம் இல்லையெனினும், என்னால் இன்றும்  மறக்க இயலாத ஒன்று, ஏனெனில் இது நம்முடனான சம்பவம்.. நமக்கெல்லாம் மதிப்பெண் அட்டை கிடைக்கவில்லை என பல்கலைக் கழகம் சென்று போராட்டம் நடத்தினோம்.  அப்போராட்டம், கல்லூரிக்கோ, துறைப்  பேராசிரியர்களுக்கோத்  தெரியாது.  தெரிய வந்த பின் சொசொமீ சார் ருத்ர தாண்டவமே நிகழ்த்திவிட்டார்.  அதில் மாணவர்களுக்காக பரிந்து பேசிக் கொண்டு இருந்த மகாதேவன், மற்றொரு மாணவனின் அரியர்ஸ் எவ்வளவு என்றே இதனால் தெரிய வில்லை என்றவுடன் உனக்கு எவ்வளவு என சொசொமீ சார் கேட்க "ரெண்டு" எனத் தணிந்த குரலில் தயக்கத்தோடு சொல்ல, உடனே துப்பாக்கித் தோட்டாப் போல் சீறி வந்தது "உன் கடையே பத்திகிட்டு எரியுது, அடுத்தவன் கடைய பாக்குறியா? உக்காருடா  முட்டாள்".  அதன் பின்னர் யாரிடத்திலும் சத்தமே எழவில்லை. அந்தப் பிரச்னை கடைசி ஆண்டில்தான் தீர்ந்தது. எங்கே சீற  வேண்டும், எங்கே சிரிக்க வேண்டும் என நன்றாய்த் தெரிந்து வைத்திருந்தார்.

        மூன்றாம் ஆண்டு இறுதியில் நமது தோழி ஒருவர் காதல் மணம்  புரிந்து கொண்டார். அவர் திருமணம் முடிந்த கையோடு என் வீட்டருகில் வருகையில் பார்த்துவிட்டேன். அது காதல்  மணமெனத்  தெரியாது.   பழச்சாறு பருகச் சொல்லி உபசரிப்பு எல்லாம் செய்தேன். கையில், சுத்தமாய் காசெல்லாம் கிடையாது(அன்வர் சொல்வது போல்). எல்லாம் கடைக்கருகில் வீடு இருக்கிறது, கடைக்காரருக்கு நம்மை தெரியும் என்ற நம்பிக்கைதான்.  (அவர்கள் மறுத்து விட்டதால், அதில் ஏற்பட்ட அனுபவத்தைப்  பகிர இயலவில்லை).  ஆனால், இது முடிந்தவுடன், நான் சொசொமீ சார் வீட்டிற்கு ப்ராஜெக்ட் ரிப்போர்ட் கொடுக்கப்  போனேன்.  அவர் நம் வகுப்புத் தோழர்களில் யாரெல்லாம் ரிப்போர்ட் கொடுத்தார்கள், கொடுக்கவில்லை என சொல்லிக் கொண்டு வந்தார். நான் அந்தத் தோழியின் பெயர் வந்தவுடன், நான் சொன்னேன் "அவருக்குத் திருமணம் ஆகிவிட்டது. இனி கல்லூரிக்கு வரமாட்டேன் என சொல்லிவிட்டார்" எனச் சொன்னேன். (இத்தனைக்கும் அது காதல் மணம்  என்றெல்லாம்  சொல்லவில்லை. அது  எனக்கு  அப்போது  தெரியாது  என்பதால்.)  மகாதேவனுக்கு வந்த அதே வார்த்தைதான், (same  blood ) விவரம் தெரியாம பேசாதே. ஒரு பொண்ணு கல்யாணம் எவ்வளவு முக்கியம். நீ பாட்டுக்கு ஏதேதோ சொல்ற".   அவ்வளவுதான் நான் கப்சிப்.  
        
          நமது பிரிவு உபச்சார தினத்தில், அன்வர் அப்பொழுது பிரபலமாய் இருந்த மைக் மோகனின் பாடல் ஒன்றைப் பாடினான். ("நானும் தியாகராஜனே"  என  ஒரு  வரி  வரும்) பாடல் முடிந்தவுடன்  பின் வரிசைக்கு சென்ற அன்வரை தடுத்து, தன் பக்கத்தில் அமர வைத்துக் கொண்டார்.  அது அன்வர் பாடியதற்கு அவர் செய்த கெளரவம் என்றால் அது மிகையாகது.
       
         இரண்டாம் ஆண்டா அல்லது மூன்றாம் ஆண்டா என நினைவில்லை. நாடகம் ஒன்று நிகழ்த்தப்பட்டது. அதில் அன்வர் தந்தையாகவும், மகாதேவன் வீட்டு வேலைக்/சமையல் காரனாகவும் நடித்தனர்.  இதில் அன்வர் தலை சற்று நரையாய்த் தெரிய, விபூதியினைக் குழைத்து அவன் முடியில் தடவி விட்டேன். நெற்றி நிறைய பட்டையும், கண்ணாடியும்  உண்டு.  மகாதேவனுக்கு இடுப்பிலும், தோளிலும் இரண்டு துண்டு, கை பனியன் அழுக்கு வேட்டி  (அது அவனுடையதுதான்) என மேக்கப் செய்தேன்.  நாடகம் முடிந்தவுடன் "நாடகம் பிரமாதம். நல்லப் பண்ணினீங்க. மேக்கப் மேன்  யாரு? எனக் கேட்டார். அது நன்றாய் இருந்தது என்பது அவர் கேள்வியில் இருந்தது.  கிருஷ்ணமூர்த்திதான் என நண்பர்கள் சொன்னவுடன், அங்கிருந்து ஒரேப் பாராட்டு மழை என சொன்னால் அது பொய்யாக இருக்கும். ஒரு பார்வைதான்.  அதில் எல்லாமே அடக்கம்.

          //திரு சொசொமீ அவர்களுடனான என் அனுபவத்தின் முந்தைய பதிவிற்கு அன்வரும், விஜியும் நன்றாய் உள்ளது என்றுப் பாராட்டி இருந்தார்கள். விஜி தொலைபேசியிலும் சொன்னது மகிழ்ச்சியைத் தந்தது.  அவர்களுக்கு என் நன்றி.//
         

6 comments:

VJ said...

அவருடைய usual style! தலையை முன்னும் பின்னும் ஆட்டி புன்முறுவலுடன் அந்த பார்வை எப்படி இருந்திருக்கும் என ஊகிக்க முடிகிறது.

VJ said...

மஹாதேவனுடைய கெட்டப் பற்றி சொன்னதோடு விட்டால் போதாதா, (அது அவனுடையதுதான்) என்று சொல்வதில் உன்னுடைய குசும்பு நன்றாகவே புரிகிறது.

சிறியவன் said...

இந்தக் குசும்பும் இல்லன்னா, நம் நண்பர்களோட குப்பை கொட்ட முடியாது

VJ said...

எல்லோருக்குமே பள்ளி, காலேஜ் விஷயங்கள் நினைவில் இருப்பது போல் மற்ற விஷயங்கள் இருப்பதில்லை. ஏனென்றால், அந்த வயதில் எந்த வித பொறுப்போ கவலையோ இருப்பதில்லை. அந்த கால கட்டத்தில் என்ன நடந்திருந்தாலும் life long மறக்க முடியாது என்பது நிதர்சமான உண்மை. அதுவும் நமது மனதைத் தொட்ட விஷயங்கள் மறப்பதற்குண்டான சாத்தியமே இல்லை. அதனால்தான் உனக்கும் இத்தனை விஷயங்களும் இன்று வரை நினைவு இருப்பது ஆச்சரியமில்லை.

படித்து நன்கு ரசித்தேன், சில சம்பவங்கள் கண் முன் நடந்திருந்தாலும் அதைத் திரும்ப அசை போடும்போது மிகவும் நன்றாயிருக்கிறது. இதை நீயும் சரி அன்வரும் சரி நன்கு புரிந்து வைத்திருக்கிறீர்கள்.

Real treat!!

சிறியவன் said...

@ விஜி நன்றி

Anvar Husain said...

கிருஷ்ண சோ சோ மீ அவர்களுடனான உன் பதிவுகளை இன்னும் கூட விரிவாக சொல்லியிருக்கலாம். ஏனெலில் அவருடனுள்ள அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் போது அறிவார்ந்த விஷயங்களும் சேர்ந்து பகிரப்படுகிறது. இந்தப்பதிவில் கூட பார்..! ஆங்கிலமாதங்களுக்கான விளக்கம் எவ்வளவு அருமையாக கூறப்பட்டிருக்கிறது..! இதேபோல் அவர் மூலம் நீ அறிந்திருந்த விஷயங்களையும் இன்னும் நினைவிலிருக்கும் சம்பவங்களையும் விரிவான விதத்தில் பதிவு செய்தால் நன்றாகயிருக்குமென கருதுகிறேன்.