Thursday, 21 February 2013

போதுமே மௌனம்

              கல்லூரியில்  படிக்கும் காலத்தில்தான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல், மௌனமாய் நின்றோம் என்றால் இப்பொழுதும் என்ன எழுதுவது என்று தெரியாமல் திடீரென அனைவரும் மௌனம் காக்கின்றோம்.  யாரும் படிப்பதில்லையா இல்லை comment  போடத் தெரியவில்லையா ஒன்றும் புரியவில்லை. நண்பர்களே மௌனம் கலையுங்கள், பதிவிடுங்கள், பதிலிடுங்கள்.   

                மடை திறந்த வெள்ளமென கட்டுரை படைத்த அன்வர் மகவு பிறந்த மகிழ்ச்சியில் திக்குமுக்காடி அமைதி ஆனந்தத்தில் இருக்கிறார்.  சிறியவன் சிந்திக்க நேரமின்றி விளையாடிக் கொண்டு இருக்கிறார் போலும்.(split  personality என விஜி நினைப்பது கேட்கிறது.)

                விஜி மட்டுமே தமிழர் திருநாள் அன்று பதிவிட்டு 2013க்கானக் கணக்கைத் துவக்கி வைத்துள்ளார். இனி புதுப் பதிவர்களும் வரவேண்டும் என ஆவலோடு இப்பதிவை இடுகின்றேன்.  வருக நண்பர்களே, வருக பதிவிடுக.

Monday, 14 January 2013

பொங்கல் நல்வாழ்த்துக்கள்


உணவளிக்கும் உழவர்க்கு 
பல்லுயிர் காக்கும் பகலவனுக்கு 
பால் கொடுக்கும் பசுவுக்கு நன்றி கூறி 
மகிழ்வுடன் இனிய பொங்கல் திருநாளைக் கொண்டாடுவோம்.

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Tuesday, 11 December 2012

திரு.சொ.சொ.மீ. சுந்தரம்


திரு சொ  சொ  மீ சுந்தரம் அவர்கள் குறித்த ஒரு தொகுப்பு அவரிடம் இருந்து எனக்கு கிடைத்தது. அதனை இங்கே பதிவிட்டுள்ளேன்.


        திரு சொ சொ மீ அவர்கள் 7.8.1943 அன்று தெய்வத்திரு சொர்ணலிங்கம் செட்டியார், தெய்வத்திரு  மீனாட்சி ஆச்சி ஆகியோருக்கு மகவாகப் பிறந்தார். அவர் தன் கல்லூரிப் படிப்பினை காரைக்குடி அழகப்பக் கல்லூரியில் இளம் வணிகவியலையும்   (B. Com ),  முது  வணிகவியலினை பச்சையப்பன் கல்லூரியிலும், M.Phil பட்டத்தை மதுரைக் காமராசர் பல்கலைகழகத்திலும் பெற்றார்.  வணிகவியலில் பட்டம் பெற்று பணி  செய்தாலும் முனைவர். வ.சுப. மாணிக்கனார்,  கம்பனடிப்பொடி என வழங்கப்படும் தெய்வத்திரு காரைக்குடி  சா. கணேசன் ஆகியோர் தூண்டுதலினால் தமிழ் பயின்று, படிக்கும் காலத்தில்  பலகலைக் கழக மரபுக் கவிதைப் போட்டி, சென்னை மாணவர் மன்ற கவிதைப் போட்டி ஆகியவற்றில்  மரபுக் கவிதை எழுதி முதல் பரிசு பெற்றுள்ளார்.

           1962 முதல் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களிலும், சிங்கப்பூர்  மற்றும் இலங்கையிலும் நடைபெறும் கவியரங்குகளில் பங்கு பெற்று, பின்னர் தலைமையும் ஏற்றுள்ளார். `1981 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில், கவியரசர் கண்ணதாசன் தலைமையில் நடைபெற்ற "தலையாய தமிழுக்கு நிலையாய  மகுடங்கள்" என்றத் தலைப்பில் 400 வரி மரபு கவிதைக்கு பொற்கிழிப் பெற்று, "பொற்கிழிக் கவிஞர்" ஆனார். கவியரசால், சொல்லுக்கு சொல் மீறும்  சுந்தரம் என்றப்  பாராட்டைப் பெற்றார்.

        1999 ல் மதுரை ராஜா மன்றத்தில் தமிழிசை சங்கத்தினரால் தமிழ் பணிக்காக மீண்டும் ஒரு பொற்கிழிப் பெற்றார். 2002 ல் சென்னை கம்பன் கழகம், 2005 ல் முன்னாள் அமைச்சர் இராம. வீரப்பன் அவர்களின் 80 வது அகவை கொண்டாட்டம், இவற்றில் பாராட்டு பெற்றார்.  2009 ஆம் ஆண்டு திருவாவடுதுறை ஆதீனத்தால் "தமிழாகமச் சிந்தனைச்  செல்வர்" என்றப்  பட்டம் சூட்டப் பெற்றார்.

        மதுரைத் திருப்புகழ் சபையினில் மாதந்தோறும் திருப்புகழ் விரிவுரை நிகழ்த்தி வரும் இவர், மதுரை கம்பன் கழகப் பொருளாளராக பணியாற்றுவதோடு, 2003 ஆம் ஆண்டு முதல் மதுரையில் திருவாசக விழா  நடத்தி வருகிறார்.  இவர் திருப்புகழையும், திருவாசகமும் முற்றும் கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இது மட்டுமல்லாது திருமந்திரம், பெரிய புராணம், கந்தபுராணம், கம்ப ராமாயணம், அபிராமி அந்தாதி, வில்லி பாரதம், திருவருட்பா, திருப்புகழ் ஆகியவற்றில் 15 நாட்கள் தொடர் சொற்பொழிவு செய்திருக்கிறார்.  தன்  15ஆவது  வயதில்  சிவ  தீக்ஷை  பெற்ற இவர், 1969 முதல் சபரி மலை யாத்திரையும், பழனிக்கு  காரைக்குடியில் இருந்து தைப் பூசத்திற்கு பாத யாத்திரையும் சென்று வருகிறார்.

இவர் பெற்ற பட்டங்களும் ஆண்டும், வழங்கியோரும்:
 1) 1972 - சொல்லோவியர் - பாவலர் மன்றம், திருப்பனந்தாள்.
 2) 1978 - திருமந்திரச் சொல்மணி - பன்னிரு திருமுறை மன்றம், மதுரை
 3) 1981 - விரிவுரை வித்தகர் - விட்டவாசல் முனீஸ்வரர் கோவில், மதுரை.
 4) 1999 - திருப்புகழ் உரைமணி - மதுரைத் திருப்புகழ் சபை 
 5)2001 - செந்தமிழ்ப் பேரொளி - கஞ்சி மகாஸ்வாமி ட்ரஸ்ட், திருப்பரங்குன்றம்
6) 2005 - நற்றமிழ் நாவலர் - திருவள்ளுவர் கழகம், மதுரை.

           இவர் தமிழில், காஞ்சிப்  பெரியவர் திருநீறு விடு தூது,  பண்டிதமணி பிள்ளைத் தமிழ், ஆண்டவனும் ஆண்டவரும், உலகப் புகழ் பெரும் கோவிலூர்த் திருமடம், காசிப்பதியும் கங்கை நதியும், கட்டிகுளம்   மாயாண்டி சுவாமிகள் வரலாறு, திருவாசகம் மூலமும் உரையும்  எந்தையும் தாயும் என்ற நூல்களும், ஆங்கிலத்தில், Secretarial Practice, Business Organisation, Insurnce, Entrepreneurship Development & Business Environment ஆகிய நூல்களை எழுதி உள்ளார். திருவாசக மூலம் மற்றும் உரையை குறுந்தகட்டிலும் வெளியிட்டுள்ளார்.

           சிங்கப்பூர், இலங்கை, மலேசியா , நேபாளம், திபெத், ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரியா மற்றும் வியட்நாம் போன்ற வெளிநாடுகளுக்கு சென்றுள்ள இவர்  திருக்  கயிலாய  யாத்திரையும்  மேற்கொண்டுள்ளார்.  தமிழுக்காக பணி  புரிந்த இவர், வணிகவியல்  பேராசிரியராக  சென்னை  லயோலாக் கல்லூரியில் 1964 முதல்  1965 வரையிலும், பழனி -  பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் 1966-67 ஆம் ஆண்டுகளிலும், 1967 முதல் 2008 வரையில்  நாம்  பயின்ற  சௌரஷ்ட்ராக்  கல்லூரியிலும்  பணியாற்றி  உள்ளார். 
  
கம்பன் அடிப்பொடி சா கணேசன் 10.4.1968 அன்று இவரை வாழ்த்தி  எழுதிய மரபுக் கவிதை இதோ உங்கள்  பார்வைக்கு:

நல்ல கவிவலவன்; நம்பனுறை செம் மனத்தனன்;
வெல்லத்  தமிழ்சுவைநா வீறாளன் - சொல்லரிய
மெய்யுணர்வு நன்குடைய மீனாட்சி சுந்தரன்
தெய்வ அருள் பெற்றுயர்க தேர்ந்து.

Monday, 12 November 2012

LET OUR SORROWS BURST LIKE CRACKERS..
OUR HAPPINESS BE LIKE SPARKLERS..
OUR DREAMS SOAR LIKE ROCKETS..
AND LET OUR LIFE BE ENLIGHTENED BY THE LIGHTS OF DIWALI...!!!


WISHING THE ALUMNAE A VERY HAPPY & 
PROSPEROUS DIWALI!!

Tuesday, 6 November 2012

9. NCC - சைக்கிள் சவாரி


பள்ளிப்பருவத்தில் NCC மாணவர்களின் உடை மற்றும் அவர்களின் மிடுக்கான தோற்றத்தில் ரொம்பவும் கவரப்பட்டிருக்கிறேன். அவர்களின் சுறுசுறுப்பான செயல்முறைகள் கட்டுக்கோப்பான பயிற்சிகளை பார்க்க வசீகரமாகயிருக்கும். காக்கி உடுப்பில் விரைப்பாக அவர்கள் நடந்து செல்வதைப் பார்ப்பது கண்கொள்ளாக்காட்சி. NCC யில் சேரனுமென்ற ஆசை அளவுகடந்திருந்தும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காததால் அது கைவரப்பெறாத கனவாகவாகவேயிருந்தது.

Wednesday, 31 October 2012

பேராசிரியர்களும் நானும் - 7

எல்லோருக்கும் ஒரு பதிவு என்றால் இவருக்கு மட்டும் இரண்டாவதும் பதிவிடும்  அளவிற்கு எத்தனையோ சம்பவங்கள். நாளும் ஒரு சம்பவம் நிகழும் என்றாலும் குறிப்பாய் சில சம்பவங்கள், என்னை முன்னிறுத்துவதையே  இங்கு குறிப்பிடுகின்றேன்.

Friday, 26 October 2012

பேராசிரியர்களும் நானும் - 6

  நாம் ஒருவரை சந்திக்கையில் சிலரை உடனேப் பிடித்து விடும், சிலரைக் கண்டால் வெறுப்பாய் இருக்கும். காரணம் தெரியாது.  அது முன்ஜென்மத் தொடர்பு காரணம் என்பார்கள் சிலர்.  அதுபோல், திரு சொ சொ மீ அவர்களுடனான தொடர்பு முன் ஜென்மத் தொடர்பு என்றும்  சொல்லலாம்.

Thursday, 18 October 2012

திரு சொ.சொ.மீ. உரை - “பக்தி இலக்கியம்”


திரு சொ.சொ.மீ. அவர்கள் தில்லியில் 15.09.2012 அன்று நடந்த அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாட்டில் “பக்தி இலக்கியம்” என்ற தலைப்பில் உரையாற்றிய போது பதிவு செய்யப்பட்டது.

பின்வரும் பாடல்களைத் தன் உரையில் குறிப்பிடுகிறார் :


பரிபாடல்

யா ஆம் இரப்பதை பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால்அருளும் அன்பும் அறனும் மூன்றும்

திருமந்திரம்

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடும் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே


திருஞான சம்பந்தர்

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாம்மே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே

திருவாசகம்

ஏசினும், யான் உன்னை ஏத்தினும், என் பிழைக்கே குழைத்து வேசறு விடுதி கண்டாய்

அடைக்கலப்பத்து
மாவடு வகிர் அன்ன கண்ணி பங்கா!நின் மலர் அடிக்கே
கூவிடுவாய்? கும்பிக்கே இடுவாய்? நின் குறிப்பு அறியேன்;
பா இடை ஆடு குழல் போல், கரந்து பரந்தது, உள்ளம்,
ஆ, கெடுவேன்;உடையாய் அடியேன் உன் அடைக்கலமே.

(திரு சொ  சொ  மீ சுந்தரம் அவர்களின் உரைக்கு, தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்)

Sunday, 7 October 2012


வார்த்தைகளே ஓவியமாய்......

        உலக மதங்களின் பாராளுமன்றம் நடைபெற்ற சிக்காகோவில் 1893இல் சுவாமி விவேகானந்தர் ‘அமெரிக்க நாட்டு  சகோதரிகளே, சகோதரர்களே’ என்று துவங்கிய,  வரலாற்றுச்சிறப்பு மிக்க சொற்பொழிவை நிகழ்த்தியது எல்லோரும் அறிந்த ஒன்று. இங்குள்ள ஆர்ட் இன்ஸ்டிடியூட் இருநூற்றைம்பது ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. இதில் பல அரிய ஓவியங்களும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான கலைப்பொருட்களும் காட்சிக்கு வைக்கப்படிருக்கின்றன. இந்த ஆர்ட் காலரியில் கண்காட்சி நடத்துவது பல ஓவியர்களுக்கு வண்ணக்கனவு.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இடத்தில் சுவாமியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க உரை மையமாக இடம் பெற்றிருப்பது பெருமைக்குரியது. இந்தப் பெருமையைச் சேர்த்தவர், ஜித்திஷ் கல்லட் (Jitish Kallat) என்ற பாரம்பரிய இந்திய ஓவியர். இவர் இந்த இடத்தில் விவேகானந்தர் ஆற்றிய உரையை இன்ஸ்டிடியூட்டின் Grand Stairs எனப்படும் மாடிப்படிகளில் வானவில் வண்ணங்களில் வரிசையாகப் பதித்து “Public Notice 3” என்ற பெயரில் ஓவியமாக்கி இருக்கிறார். முதல் படியிலிருந்து படித்துக்கொண்டே ஏறினால் இரண்டாம் தளத்தை அடையும்போது முழு உரையையும் படிக்கும் வண்ணமாக அமைக்கப்பட்டிருப்பது இதன் தனித்தன்மை.
இவரின் கைவண்ணம் செப்டம்பர் 11, 2010 அன்று, சுவாமியின் சொற்பொழிவிற்கு சரியாக 108 வருடங்களுக்குப்பிறகு காட்சிக்கு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதன் எழுத்துக்கள் ஒளியால் விளங்குகின்ற சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில் அச்சுறுத்தும் நிலைகளைக்குறிக்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கின்றன

.
விவேகானந்தரின் உரையை நினைவுப்பட்டயம் இட்டு புதுமையான கண்காட்சியாக்கி கௌரவித்திருப்பது பாராட்டத்தக்கது.