இதுவரை கடந்து வந்த வாழ்வின் வழிகளில் நான் மிகமிக சந்தோஷமாகவும் சவுகரியமாகவும் வாழ்ந்த காலங்கள் நிச்சயமாக மதுரை சவுராஷ்டிரா கல்லூரியில் படித்த காலங்கள் தான்.
ப்ளஸ் 2 பள்ளி பொதுஇறுதி தேர்வு எழுதி முடித்ததும் அப்பாடா தொல்லை விட்டது என்ற எண்ணத்துடன் மதுரை வீதிகளை நண்பர்கள் சகிதம் உலா வந்து கொண்டிருந்தேன். எனது பள்ளித்தோழனான சீனிவாசனுடன் சுற்றாத இடங்களேயில்லை எனலாம்!! எவ்வளவு நாள் தான் சுற்றிக்கொண்டேயிருக்க முடியும்? ப்ளஸ் 2 ரிசல்ட் வருவதற்கான தினம் நெருங்க நெருங்க இதயத்தின் ஓசை காதுகளுக்கு அருகில் கேட்க ஆரம்பித்துவிட்டது.
இதற்கிடையில் எங்களின் மற்ற நண்பர்கள் செய்தது போல் சில கல்லூரிகளுக்கு சென்று கல்லூரியில் சேருவதற்கான விண்ணப்பங்களை வாங்க விரும்பினோம். அதனால் மூலக்கரையிலிருக்கும் திருமலை நாயக்கர் கல்லூரிக்கு சீனியுடன் சென்றிருந்தேன்! அந்த கல்லூரியின் அலுவலகத்தை அணுகி விண்ணப்பப்பாரத்தைப் பற்றி விசாரிக்க செல்லும் தருணத்தில் அங்குள்ள சில மாணவர்கள் பேசிக்கொண்டிருப்பதை கவனித்தோம்!! அப்போதுதான் திருமலை மன்னர் கல்லூரியைத் தாண்டியும் கோபாலி மலையடிவாரத்தில் ஒரு கல்லூரி இருக்கின்றது என்ற விஷயமே எனக்கும் சீனிக்கும் தெரிய வந்தது. சரி அந்த கல்லூரியையும் ஏன் விட்டுவைக்கனும் இவ்வளவு தூரம் வந்துவிட்டோம் அதனையும் பார்த்துவிட்டு வந்துவிடலாம் என்ற எண்ணத்துடன் விளாச்சேரிக்கு செல்லும் பாதை வழியே நடந்து சென்றோம்!! பாதையின் இருபுறங்களும் மரங்கள் அடர்ந்து பாதையின் ஒரு பக்கத்திலிருக்கும் பெரிய ஏரியில் பறந்து விளையாடும் பறவைகள் என்று செல்லும் வழியெல்லாம் ரம்மியமாகயிருந்தது.
இப்படியாக இயற்கையை ரசித்தப்படி கொஞ்ச தூரம் நடந்து சென்றதும் கல்லூரியின் நுழைவுவாயில் தென்பட்டது!! நுழைவுவாயில் வழியாக நுழைந்து சவுராஷ்டிரா கல்லூரியை தரிசித்த அந்தநாள் என் வாழ்வின் ஆசிர்வதிக்கப்பட்ட நாள்!! ஆஹா! ஆஹா! இப்போது நினைத்தாலும் எனது தேகம் சிலிர்க்கின்றது!
கோபாலி மலையின் நடுவில் நீள்செவ்வக வடிவில் ரோஸ் வண்ணத்தில் சவுராஷ்டிரா கல்லூரி தூரத்தில் தெரிந்தது. நுழைவுவாயிலிருந்து இருட்டு வண்ண தார் ரோடு கொஞ்சம் கொஞ்சமாக மலைபாதை போல் ஏறுமுகமாக நீளமாக சென்று பாதையின் இருபுறமும் யூகலிப்டஸ் மரங்களின் அணிவகுப்புகளுடன் கல்லூரியை அடையும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்த காட்சியை கண்கொட்டாமல் பார்த்து மலைத்துப்போயிருந்தேன். மதுரையில் குறிஞ்சி பிண்ணணியில் ஓரு கல்லூரியா? ஆஹா! அந்தக்கணமே முடிவு செய்துவிட்டேன் படித்தால் இந்தக்கல்லூரி தான் படிக்க வேண்டும் என்று. என் வாழ்க்கையில் நான் எடுத்த முதல் குறிக்கோள் அதுதான்! அந்தக்கல்லூரியை பார்க்கும் போதே ஓருவிதமான தெய்வீகம் கலந்த செல்வந்தக்கலை தெரிந்தது. மனசுக்குள் பூரிப்பும் பரவசமும் பொங்கியது. உடலெங்கும் உற்சாகம் ஊற்றெடுத்தொடியது.யூரேகா! யூரேகா! என்று உள்மனது கூவிக்கொண்டேயிருந்தது.கண்டுகொண்டேன்! கண்டுகொண்டேன்! என் கனவுக்கல்லூரியைக் கண்டுகொண்டேன். என் கண்களை விட்டு இன்றும் மறையாத எழில் கூடம் எனது கல்லூரி!
வாழ்க்கையின் விசித்திரமான திருப்பங்களை யார் அறியமுடியும்? ஆனால் ஓன்று மட்டும் மிக மிக நிச்சயம் எந்தவொரு விஷயத்தை நாம் தீவிரமாக நேசிக்கிறோமோ அது நமக்குக் கிடைத்தே தீரும். எனக்கும் அப்படித்தான் நடந்தது. +2 பரிட்சை முடிவுகள் நம்பமுடியாதயளவிற்கு சாதகமாக வந்தது.இறைவனின் அருளால் பாஸும் ஆகி விண்ணப்பத்திருந்த கல்லுரிகளிலெல்லாம் எந்த டொனேஷனும் கேட்காமல் “Spot admission” வாங்கித் தருமளவிற்கு மார்க்கும் கிடைத்திருந்தது.
எனக்கு சவுராஷ்டிரா கல்லூரியில் முதலில் “Admission Card”வரவில்லை; விண்ணப்பித்திருந்த மற்ற இரு கல்லூரிகளான சரஸ்வதி நாராயணன் கல்லூரி, மதுரா கல்லூரிகளிலிருந்து “Spot Admission card” வந்துவிட்டது. ஆனால் நண்பன் சீனிவாசனுக்குForward Class என்பதால் Admission Card வரவில்லை. ஆகவே அந்தக் கல்லூரிகளில் நானும் சேரவில்லை. மற்ற நண்பர்களெல்லாம் பயமுறுத்துக்கிறார்கள் டேய்! கல்லூரியில் இடம் கிடைப்பதென்பதே குதிரைகொம்பு! அதுவும் எந்த டொனேஷனும் கேட்காமல் “Spot Admission Card” வருவதென்பது மிகப்பெரிய வரப்பிரசாதம் அதை தவறவிட்டுவிடாதே!என்று அனுதினமும் அச்சுறுத்திக்கொண்டேயிருந்தார்கள் எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் சீனிவாசனுடன் அலைந்துக் கொண்டிருந்தேன். அப்புறம் தீடிர் திருப்பமாக சீனிவாசனுக்கு எனது கனவுக்கல்லூரியான சவுராஷ்டிரா கல்லூரியில் “Admission”கிடைத்துவிட்டது. ஆனால் எனக்குக் கிடைக்கவில்லை என் நிலைமை பரிதாபத்திற்குரியதாய் மாறிவிட்டது. ஆனால் சீனி விடவில்லை. நானும் அவனும் அலையாய் அலைந்து கல்லூரியில் அந்த சமயம் ‘Secretary” யாகயிருந்த மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய திரு. குப்பையன் அவர்களை அவர் வீட்டிலேயே பலமுறை சென்றுப் பார்த்து விவரத்தை எடுத்துரைத்து இறுதியாக எனக்கும் Admission வாங்கி விட்டோம்.
அட்மிஷன் கிடைத்த அன்று அடைந்த ஆனந்தம் அம்மாடி! இப்போது நினைத்தாலும் இனிக்கிறது
எனது தந்தையார் மிகுந்த பெருமிதத்துடன் என்னை அழைத்துக்கொண்டு கல்லூரிக்கு வந்து Admission Fees கட்டிவிட்டு வாழ்த்திவிட்டுச்சென்றார். என் தந்தையார் எனது கல்லூரிக்கு வந்தது அதுதான் முதலும் கடைசியும் ஆகும்.
நினைவுகளின் உலா தொடரும்........
7 comments:
ஆர்வங்களின் அணிவகுப்பாய், அனுபவத்தின் தொகுப்பாய், இளமையின் துடிப்பாய், தமிழின் இனிமையாய் சிறப்பானத் தொடக்கம். மேன்மேலும் எழுத்துக்களின் அணி வகுப்பை எதிர்பார்க்கின்றேன். ஆசிரியர் குழு உங்களை வாழ்த்துகிறது.
VOW!! Wonderful beginning!!
இதைப் படித்ததும் தமிழின் அழகை ரசிப்பதா? நினைவுகளின் வர்ணனையை ரசிப்பதா? நினைத்தாலே இனிக்கும் கல்லூரி நினைவுகளின் மழையில் நனைவதா? என்று மனதுக்குள் புரியாத குறுகுறுப்பு வந்ததை மறுக்க முடியாது.
அதுவும் ஆசிரியரின் ஆசியுடனும் வாழ்த்துகளுடனும் (சிறியவர் பெரியவரானது எப்போது?)அற்புத ஆரம்பம்!!
சிறியவன் என்றும் பெரியவன் ஆவதில்லை. வாழ்த்தியது ஆசிரியர் அல்லவா?
நான் திரு. குப்பையன் அவர்களை சந்திக்க என் தந்தையுடன் சென்று இருந்தேன், அவர் வெளியே சென்று இருப்பதாக கூறினார்கள். நாங்கள் திரும்பி செல்கையில் திரு ராம கோபாலன் அவர்கள் வெட்டுப்பட்டதாக தகவல் கிடைத்து, அரசு மருத்துவமனை சென்றேன். அங்கு திரு குப்பையன் அவர்கள் இருந்தார்கள். அவரிடம் திரு அண்ணாஜி என்ற முதியவர் எனக்காக பரிந்துரை செய்தார். அப்பொழுது நான் படித்தப் பள்ளியின் விவரம் கேட்டார். சேதுபதி என்றவுடன், அன்வர் உங்கள் வகுப்பா? என்றார். ஆம் என்றேன், அவருக்கு இடம் உண்டு என்று அவரை சந்தித்தால் கூறுங்கள் என்றார். எனக்கு அப்போது அன்வர் வீடு தெரியாது, அதனால் தெரிவிக்க இயலவில்லை. தன்னிடம் வந்த ஒவ்வொரு மாணவன் குறித்தும் அவர் நன்கு அறிந்து வைத்து இருந்தார், அந்த குப்பையன் எனும் எளிய மாமனிதர். அவரை என்றென்றும் நன்றியுடன் நினைவு கூறுகின்றேன்.
Multi personality யார் என்று புரிகிறதா?
பதவி வரும்போது பணிவு வரவேண்டும் என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.
இத்தனை வருடம் கடந்தாலும் அந்நிகழ்ச்சியை நன்றி மறவாமல் நினைவு கூர்ந்த நண்பர்களுக்கு பாராட்டு.
என்னை மடக்கி விட்ட விஜியின் வாதத் திறமைக்கு என் வாழ்த்துக்கள்
Post a Comment